வழிநெடுகத் துண்டறிக்கை வழங்கியும் பரப்புரை மேற்கொண்டும் சென்றனர் தோழர்கள். சமுக்காளத்திற்குப் பெயர் பெற்ற ஜம்பை, பெரியமேளபாளையம், தளவாய்ப்பேட்டை, ஓரிச்சேரிப்புதூர் என அனைத்து ஊர்களிலும் மக்கள் தோழர்களை அன்புடன் வரவேற்று ஆதரித்தனர். பெரியமேளபாளையத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் தோழர்களைத் தம் இல்லத்திற்கு வரவேற்று அழைத்துச் சென்று பழச்சாறு வழங்கிக் குளிர்வித்தார்.
ஆப்பக்கூடலுக்குச் சற்று முன்னர் சாலையோரத்தில் இருந்த வளமனை ஒன்றில் கிடைத்த வரவேற்பும் இங்குக் குறிப்பிட்த்தக்கது. துண்டறிக்கையைக் கண்ணுற்ற அவ்வில்லத்தரசி குடநீருடன் குடிக்கக் குவளையும் வழங்கி வரவேற்றார். அவ்வீட்டின் முன் அடர்ந்து நிழல் பரப்பிக் கொண்டிருந்த வேப்ப மரத்தைப் பார்த்த தோழர்கள் அங்கேயே சாப்பிடலாமா எனப் பேசத் தொடங்கியதும் அவ்வில்லத்தரசி உள்ளே வந்து அமர்ந்து சாப்பிட அழைத்த்து அனைவரையும் மகிழ வைத்தது. சாப்பிட்டபின் அங்கேயே ஒய்வெடுத்தனர் தோழர்கள்.

ஓய்விற்குப் பின் புறப்பட்ட தோழர்கள் ஆப்பக்கூடல், புதுப்பாளையம், ஓசைப்பட்டி, செல்லப்ப கவுண்டன் வலசு, பிரம்ம தேசம், வெள்ளையம் பாளையம், தவுட்டுப் பாளையம் ஆகிய ஊர்களைக் கடந்து இரவு அந்தியூரை வந்தடைந்தனர். அந்தியூரில் தெருமுனைக் கூட்டமும் நடைபெற்றது தோழர் பாரதி நடைப் பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார்.
வழிநெடுக மக்கள் நீரும் உணவும் வழங்கியதுடன் தமிழ் மீட்பு நிதியத்திற்கு நிதி வழங்கியும் ஊக்குவித்தனர்.

No comments:
Post a Comment