குறுநடைப் பயணத்தின் தொடக்க நிகழ்வு பவானி அந்தியூர் பிரிவில் காலை 9.00 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு தலைமை தாங்கினார். தமிழகத் தொழிலாளர் முன்னணி ஈரோடு மாவட்ட அமைப்பாளர் தோழர் இரா.விசயகுமார் வரவேற்புரை ஆற்றினார்.

தமது தலைமை உரையில் தோழர் தியாகு குறுநடைப் பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். தமிழ் உரிமை, தமிழர் இனவுரிமை, தமிழ் மக்கள் வாழ்வுரிமை ஆகியவற்றை மீட்டெடுப்பதே தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தொடர்ந்து நட்த்தும் பயணங்களின் நோக்கம் என்றார். தமிழ் இனம் தொடர்ந்து தன் மொழி உரிமை தொடங்கி அனைத்து உரிமைகளையும் இழந்து வருவதை விளக்கினார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய ஆறுகளை ஏற்கனவே இழந்து நிற்பதையும், அமராவதி, பவானி ஆறுகளை இழந்து வருவதையும் சுட்டிக் காட்டினார். அரசியல் உரிமை இல்லாது போனதுதான் ஈழமக்களைக் காப்பாற்ற முடியாமல் போனதற்கான காரணம் எனக் குறிப்பிட்டார். ஏற்கனவே நஞ்சை மண்ணில் மேற்கொண்ட நெடுநடைப் பயணம் கற்றுக் கொடுத்த பாடங்களை உள்வாங்கி, இக்குறுநடைப் பயணம் தொடர்கிறது என்பதை எடுத்துரைத்த தோழர் இம்மஞ்சள் மண்ணின் குறுநடைப் பயணம் மேலும் பலவற்றைக் கற்றுக் கொடுக்கும் அவை தமிழ் மக்களை ஒன்றாய் அணி திரட்ட உதவும் என அழுத்தம் திருத்தமாய்க் குறிப்பிட்டார். தம் பேச்சின் இறுதியில் போராட்டங்களை உறுதிபட மேற்கொண்டு செல்வதற்கும் தமிழ்த் தேசம் இதழைத் தடங்கலின்றி நட்த்துவற்கும், தாய்த் தமிழ்ப் பள்ளிகளை வளர்த்தெடுப்பதற்கும் பெருநிதி தேவைப்படுவதால் தமிழ் மீட்பு நிதியத்திற்கு தமிழர் அனைவரும் வாரிவழங்க வேண்டும் என்றும் ஒரு கோடி இலக்கை விரைந்து அடைய உதவவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

வாழ்த்துரை வழங்கிய இந்திய இளஞர் பெருமன்றத்தின் ஈரோடு மாவட்டச் செயலர் வழக்குரைஞர் பாலமுருகன் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விளக்கிப் பேசினார். பெரியார் திராவிடர் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலர் இராம இளங்கோவன் தமிழக இளைஞர்கள் மதுவால் சீரழிந்து வருவதைச் சுட்டிக் காட்டி, பெரியார் தொண்டர்களும் , தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் இதை எதிர்த்துப் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். நாம் தமிழர் இயக்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலர் வழக்குரைஞர் செயராசு தம் இயக்கம் குறுநடைப் பயணத்திற்கு அனைத்து வழிகளிலும் துணை நிற்கும் என்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஈரோடு மாவட்டச் செயலர் பா.சண்முகவேல் பயணம் தன் குறிக்கோளில் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய மக்கள் குடியுரிமைக் கழகத்தின் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் சிதம்பரம்.கி, மண்ணின் மக்கள் தங்கள் தொழில் வணிக உரிமைகளை முற்றாக இழந்து வருவதால் மண்ணின் தோற்றமே மாறி வருவதையும் எடுத்துரைத்து, நொய்யலின் மரணத்தையும், பவானி மரணித்து வருவதையும் கவனப்படுத்தினார். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் காற்று நிலம் நீர் ஆகியன மாசுபட்டு வருவதையும் விளக்கினார். நடைப் பயணத் தோழர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி அவர் பயணத்தைத் தொடங்கிவைத்தார்.

நஞ்சை மண்ணில் நாற்பத்தேழு நாள்கள் தடம் பதித்த தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தோழர்கள் மஞ்சள் மண்ணில் கால் பதிக்கத் தொடங்கினர். தமிழ் உரிமை, தமிழர் இன உரிமை, தமிழ் மக்கள் வாழ்வுரிமை முழக்கங்களை ஏந்திக் செல்லும் தோழர்கள் தமிழ் மீட்பு நிதியத்திற்கு ஒரு கோடி நிதி திரட்டும் இலக்கிலும் உறுதி பூண்டு செல்கின்றனர்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் நோக்கும் இலக்கும் தெளிவானது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் அன்பான ஆதரவும், அவர்கள் தமிழ் மீட்பு நிதியத்திற்கு வழங்கும் ஒவ்வொரு காசும் இயக்கத்தை உறுதிப்படுத்தும்; போராட்டத்தை வலுப்படுத்தும்; வெற்றியை விரைவு படுத்தும்

தமிழ் மக்களை நம்பி தமிழ் மீட்பு தமிழர் மீட்பு குறுநடைப் பயணம் தொடர்கிறது.
குறிப்பு: தமிழ் மீட்பு நிதியத்திற்கு நன்கொடையளிக்க விரும்புவோர். பின்வரும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்.
G.Natarajan,
State Bank of India,
Thanjavur branch,
கணக்கு எண்:10857678873.
(or)
G.NADARAJAN
INDIAN BANK
கணக்கு எண்: 434216484
வங்கி குறியீட்டு எண்:1325
Contact number: 0091- 92831 10603, 0091- 97919 58888
E-Mail: thozharthiagu@gmail.com


No comments:
Post a Comment