ஆனால் தி.மு.கவினர் உட்பட இப்படிப் பல தரப்பட்டவர்கள் எங்களை வரவேற்கத் திரண்டதில் மிகவும் முதன்மையான காரணி - ஈழம்! ஆம், ஈழத் துயரம் கட்சி கடந்து அனைத்துத் தமிழர்களின் இதயத்தையும் புண்ணாக்கியுள்ளது. புண்ணுக்கு மருந்திட யாராவது வர மாட்டார்களா? என்ற ஏக்கம் அனைவருக்கும் உள்ளது. வரவேற்பை ஏற்று நான் உரையாற்றிய போது இது நன்கு புலப்பட்டது. ஈழத் தமிழர்களைக் காப்பாற்றத் தமிழ்நாட்டில் பல தரப்பட்டவர்களும் எடுத்த முயற்சிகளையெல்லாம் பட்டியலிட்டு, நாம் ஏன் தோற்றோம்? என்ற கேள்வியை எழுப்பி, உலக அரங்கில் தமிழினத்தின் குரல் ஒலிக்க இயலாத அவல நிலையை எடுத்துக்காட்டி, இந்த நிலையை மாற்றி உலக அரங்கில் தமிழ்க் கொடி உயர்த்தப் போராடிய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் பெருமையைக் குறிப்பிட்ட போது கூட்டத்தினர் கையொலி எழுப்பி வரவேற்றனர். “தமிழனுக்கு ஒரு நாடு அமைய விடாமல் கெடுத்த இந்தியாவுக்கு பதிலடியாக, இரு நாடுகள் அமையச் செய்வோம்!” என்று நான் பேச்சை முடித்த போது அனைவரும் உணர்ச்சிமயமாய்க் கைத்தட்டி வரவேற்றனர்.

உண்டியலடித்து விட்டு ஊரைவிட்டுப் புறப்படுமுன், என் பழைய நண்பரும் திமுக ஒன்றியச் செயலாளருமான திரு.இளங்கோ இல்லத்தில் குளிர் மோர் அருந்தி உரையாடிக் கொண்டிருந்த போதும், திமுக இளைஞர்கள் சிலர் உங்கள் பேச்சினால் நாங்கள் உணர்ச்சிவயப்பட்டோம் என்றனர். தலைவர்களின் இரண்டகத்தால் தொண்டர்கள் இனவுணர்வு அறவே பட்டுப் போய் விடவில்லை என்று ஆறுதலடைந்தோம்.
நடுப்பகலுக்கு மேல் ஊரணிபுரத்திலிருந்து புறப்பட்டுக் கொளுத்தும் வெயிலில் நிழலற்ற சாலையில் ஆங்காங்கே நாக்கை மட்டும் நனைத்துக் கொண்டு நீண்டு நீண்டு சென்ற பயணத்தின் முடிவில் அந்தி சாயப் பத்துத்தாக்கை அடைந்த போது, கோனகர் நாடு (செல்லம்பட்டி) சென்று சேர இன்னும் ஏழெட்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருந்தது. மும்பையைச் சேர்ந்த தோழர் சிறிதர் நடைப்பயணத்தில் ஒரு நாளாவது கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். காய்ந்து கிடந்த கல்லணைக் கால்வாயின் கரையில் அமைந்த குறுகிய சாலையில் நடந்து கோனகர்நாடு சென்றடைந்தோம். இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் உத்திராபதி, நாராயணன் மற்றும் மதிமுகவினர் வரவேற்று நிதியளித்தனர். தெருமுனைக் கூட்டத்தில் பேசிவிட்டு இரவு அங்கேயே ஒரு பள்ளியில் தங்கினோம்.

மறுநாள் (01-03-2010) காலை புறப்பட்டு மருங்குளம் நோக்கி நடந்தோம். தோழர் தமிழ் வேங்கையும், அவரோடு வந்த கண்பார்வையற்ற தோழர்கள் ஐவரும் மருங்குளத்தில் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள்.
பார்வையற்ற இந்தத் தோழர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு மார்ச்சு நடுவில் ஒரு நாள் விழுப்புரம் தோழர் தமிழ் வேங்கை என்னைத் தொலைபேசியில் அழைத்து, கண்பார்வையற்ற ஐவர் ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக சென்னை முதல் கன்னியாகுமாரி வரை நடைப்பயணம் சென்று கொண்டிருக்கும் தகவலைச் சொன்னார். அவர்கள் ஏற்கெனவே மதுரையைக் கடந்து விட்டதாகச் சொல்லி கோவில்பட்டி, நெல்லை போன்ற ஊர்களில் அவர்கள் இரவில் தங்கிச் செல்ல இடம் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நடைப்பயணக் குழுவின் தலைவரான தோழர் வீரப்பனும் என்னோடு தொலைபேசியில் பேசினார். நான் அந்தந்தப் பகுதி நண்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தேன்.
2009 பிப்ரவாரி 28 சென்னையிலிருந்து புறப்பட்டு மார்ச்சு 28 கன்னியாகுமாpயில் நிறைவடைந்த கண்பார்வையற்றோர் நடைப்பயணத்தில் கலந்து கொண்டவர்கள்: வீரப்பன், மாரிச்சாமி, மா.சக்திவேல், நாகராஜன், ஆறுமுகம். இவர்களில் மூவர் தொடர்வண்டிகளில் சிறு சிறு பண்டங்களை விற்கக் கூடியவர்கள். விழியிழந்த இந்த ஐவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டும் கோல்களால் தட்டித் தட்டி வழியறிந்தும் கோரிக்கைப் பதாகை ஏந்தி, துண்டறிக்கைகள் கொடுத்துக் கொண்டு சென்னையில் புறப்பட்டு ஆபத்து நிறைந்த நெடுஞ்சாலைகளில் ஒரு மாத காலம் 800 கிலோ மீட்டர் நடந்து கன்னியாகுமாரி போய்ச் சேர்ந்தது வியந்து போற்றத்தக்க செய்தி. ஆனால் அந்த நேரம் ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை.
எங்கள் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப்பயணச் செய்தி அறிந்தவுடனேயே வீரப்பனும் மற்றத் தோழர்களும் சில நாளாவது எங்களோடு நடக்க விருப்பம் தொரிவித்ததைத் தோழர் தமிழ்வேங்கை வாயிலாக அறிந்து “சாரி நீங்களே அழைத்து வந்துவிடுங்கள்”; என்றேன்.

அந்த ஐவாரில் மூவரும், (வீரப்பன், ஆறுமுகம், மா. சக்திவேல்) அவர்களோடு மேலும் இருவரும் (நித்தியானந்தம், சி. சக்திவேல்) சேர்ந்து தமிழ் வேங்கையோடு வந்து விட்டனர். நித்தியானந்தம் இளங்கலை கல்வியியல் பயின்று வரும் ஆசிரியப் பயிற்சி மாணவர். இதோ பார்வையற்ற ஐந்து தோழர்கள் எங்களோடு மருங்குளத்திலிருந்து புறப்பட்டு வல்லம் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டார்கள். பாரதி, வேல்முருகன், பாரி ஆகிய தோழர்களிடம் அவர்களைக் கைப்பிடித்துப் பாதுகாப்பாக அழைத்து வரும்படி சொல்லியிருந்தேன். ஆனால் அவர்கள் தங்களை வேறு யாரும் கைப்பிடித்து அழைத்துச் செல்லத் தேவையில்லை என்று கூறிவிட்டனர். அவர்களே கோல்களின் துணையோடும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டும் எவ்வித இடர்ப்பாடுமின்றி நடக்கக் கண்டோம். நெடுஞ்சாலையில் விரையும் பேருந்துகள், சுமையுந்துகள் பேரொலி எழுப்பும் போது மட்டும் அவர்கள் மிரண்டு நடுங்கி ஓரமாய் ஒதுங்குவது பார்க்கிற நமக்குத் தவிப்பாய் இருக்கும்.
செங்கிப்பட்டி கடந்து ஒரு தென்னந்தோப்பில் நண்பர் பின்னையூர் கலியமூர்த்தி அனுப்பி வைத்த பகலுணவைச் சாப்பிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். தோழர் வீரப்பனிடம் அவருடைய குழந்தை எங்கள் அம்பத்தூர் தாய்த் தமிழ் பள்ளியில் படித்துக் கொண்டிருப்பது பற்றி உசாவினேன். பள்ளித் தலைமை ஆசிரியரைத் தொலைபேசியில் அழைத்து, நம் பள்ளிக் குழந்தையின் தந்தை ஒருவர் எங்களோடு நடைப் பயணத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்று தொரிவித்தேன். தாய்த் தமிழ் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரையும் நடைப் பயணத்தில் பங்குபெற அழைத்திருந்தோம். ஆனால் கண்பார்வையற்ற வீரப்பன் ஒருவரைத் தவிர வேற யாரும் அதுவரை வரவில்லை.

தஞ்சை - திருச்சி நெடுஞ்சாலையில் வல்லத்திலிருந்து செங்கிப்பட்டி செல்வது கடினமாகவே இருந்தது. அகன்ற சாலை அமைக்கும் பணி நிறைவடையாத நிலை, நெடுஞ்சாலையில் விளக்கொளியும் இல்லாததால் எல்லாருமே பார்வையற்றவர்கள் போலாகி விட்டோம். விரைந்து நடந்து செங்கிப்பட்டியை அடைந்தபோது இரவு 8.30 ஆகிவிட்டது. தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் குழ. பால்ராஜ், கருணாநிதி மற்றும் ஏராளமானோர் எங்களைப் பாசத்துடன் வரவேற்றனர். வரவேற்புக் கூட்டத்தில் நிறைவாக நான் பேசுவதற்கு முன் தோழர் வீரப்பனைப் பேசச் செய்தோம். தமிழ் மீட்பின் தேவையை அவர் அழகாகவும் ஆணித்தரமாகவும் வலியுறுத்திப் பேசினார். மிக அண்மையச் செய்திகளைக் கூட அவர் சுட்டிப் பேசிய விதம் எங்களுக்கு வியப்பாய் இருந்தது. இவர்களா கண்பார்வையற்றவர்கள்? கண் இருந்தும் கண்ணோட்டம் இல்லாத எத்தனைப் பேரைப் பார்க்கிறோம். அவர்களோடு ஒப்பிட்டால் வீரப்பனும் மற்ற பார்வையற்ற தோழர்களும் இரண்டல்ல, மூன்று கண் உடையவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
மிக்கேல்பட்டியிலிருந்து வந்திருந்த தோழர் விக்டாரிடம் அடுத்த நாள் பயணத் திட்டம் குறித்துப் பேசி விட்டுப் பயணியர் விடுதியில் உறங்கச் சென்றோம். பார்வையற்ற தோழர்களுக்காக எம்மால் முடிந்த சில வசதிகளைச் செய்து கொடுக்க நான் முற்பட்ட போது அவர்கள் எதுவும் தேவையில்லை என்று சொல்லி விட்டு, மேசைப் பலகையிலும், தரையிலும் ஒடுங்கி உறங்கிப் போனார்கள்.
2010 மார்ச்சு 2 தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் 37ஆம் நாள் காலை செங்கிப்பட்டியிலிருந்து புறப்பட்டு பூதலூர் வழியாகத் திருக்காட்டுப்பள்ளி நோக்கி நடக்கலானோம். ஆற்றங்கரைத் தோப்பு ஒன்றில் விக்டரும் தோழர்களும் கொண்டுவந்து பகலுணவை முடித்து விட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுத்த போது வீரப்பனிடமும் பார்வையற்ற மற்றத் தோழர்களிடமும் அவர்களின் அரசியல் பார்வைகளைப் பற்றிக் கேட்டறிந்தேன். அவர்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைப் புரிந்து ஏற்று அதில் பற்றுடன் இருப்பதைத் தொரிந்து கொண்டேன். கண்பார்வை இல்லா விட்டால் என்ன? இவர்களது மண்பார்வை கூர்மையானது.

மாலை 5 மணியளவில் திருக்காட்டுப்பள்ளி சென்றடைந்தோம். வணிகர் சங்கத்தைச் சேர்ந்த தோழர் தியாக, சுந்தரமூர்த்தியும் மற்றவர்களும் கடைத் தெருவிலேயே மேடை போட்டு வரவேற்றுக் கூட்டம் நடத்தினார்கள். எனக்கு முன்னதாகத் தோழர் வீரப்பன் பேசினார். முன்கூட்டியே அணியமாய் இருந்ததால், செங்கிப்பட்டியை விடவும் இங்கே சிறப்பாகப் பேசினார். கண்பார்வையற்ற ஒருவாரின் இந்த உரைவீச்சு கேட்டோர் அனைவரையும் ஆழ ஈர்த்து நிறுத்தியது.
இறுதியாக நான் பேசினேன். திருக்காட்டுப்பள்ளியில் திமுக வலுவான கட்சி என்ற புரிதலோடு தான் பேசினேன். என் எதிரில் நின்று கொண்டும், கடைகளில் உட்கார்ந்து கொண்டும் கேட்டுக் கொண்டிருந்த பலரும் திமுகவினர் என்பது வெளிப்படையாகத் தொரிந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கி காவிரிச் சிக்கல் வரை ஒவ்வொன்றையும் சுருக்கமாக எடுத்துச் சொல்லி, திமுகவும் கலைஞர் கருணாநிதியும் வகித்துள்ள இரண்டகப் பங்கை விளக்கிச் சொன்னேன். திமுகவினர் முகத்தில் தொரிந்த ஆர்வம் கண்டு இன்னும் கூர்மையாகத் திமுகவையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தினேன். அவர்கள் கையொலி எழுப்பி என் பேச்சை வரவேற்றனர். பிரபாகரன் படம் வைக்கக் கூடாது என்று திமுக அரசின் காவல்துறை கெடுபிடி செய்வதைச் சொல்லி உமது படத்தை மட்டும் அரிசி மூட்டையிலிருந்து சர்க்கரை, பாமாயில் பொட்டலம் வரை ஒவ்வொன்றிலும் போட்டுக் கொள்ளும் போது, நாங்கள் பிரபாகரன் படம் வைக்கக் கூடாதா? பிரபாகரன் படத்தை எங்கள் உள்ளத்தில் பதித்து வைத்துள்ளோமே, என்ன செய்வாய்? என்று நான் ஒங்கிக் கேட்ட போது, திமுகவினர் உட்பட அனைவரும் கைதட்டி ஆதரவு தொரிவித்தார்கள்.
அன்றிரவு தோழர் தமிழ் வேங்கையோடு வீரப்பன் உள்ளிட்ட பார்வையற்ற தோழர்கள் ஐவரும் எங்களிடம் பிரியா விடை பெற்று சென்னைக்குப் புறப்பட்டார்கள் - நடைப்பயணத்தின் நிறைவுப் பகுதியில் மீண்டும் வந்து கலந்து கொள்வதாக வாக்களித்து விட்டு!
தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப்பயணத்தில் கண்பார்வையற்ற தோழர்கள் இரண்டு நாட்களே கலந்து கொண்டாலும் எம்மை வெட்கப்படுத்தி ஊக்கம் தந்த வகையில் அது ஓர் ஈடிணையற்ற பங்களிப்பு!
- தியாகு