இன்று (2010 பிப்ரவரி 17) தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் 24ஆம் நாள். இப்போது அம்மையப்பனில் இருக்கிறோம். இங்கிருந்து திருவாரூர் செல்ல வேண்டும். நாகை மாவட்டம் முடிந்தது. திருவாரூர் மாவட்டத்தில் ஒரு பாதி முடிந்தது. மறு பாதியை முடித்து தஞ்சாவூர் மாவட்டத்தையும் முடிக்கும் போது 47 நாள் முடிந்திருக்கும். மார்ச் 12 குடந்தையில் நிறைவு.
ஆக, கால வகையிலும் தொலைவு வகையிலும் நெடுநடைப் பயணத்தின் நடுப்புள்ளியில் நிற்கிறோம். சற்றே நின்று பின்னோக்கவும் முன்னோக்கவும் இதுவே தக்க தருணமாக இருக்கக் கூடும்.தமிழ் மீட்பு தமிழர் மீட்புக் கோரிக்கைகளைப் பரப்புரை செய்வதிலும், மக்களிடமிருந்து அவர்களின் குறைகள்-கோரிக்கைகளை அறிந்து கொள்வதிலும், பயணக் குழுவில் இடம் பெற்றுள்ள நாங்களே எங்களைப் பக்குவப்படுத்திக் கொள்வதிலும், பழைய உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதிலும், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதிலும், தமிழீழப் போராட்டம் தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகளைத் தெரிந்து கொள்வதிலும், பயணப் பரப்பின் சமூக-அரசியல் சூழலைப் பயில்வதிலும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் செயல்படும் விதத்தைத் தெரிந்து கொள்வதிலும், மொத்தத்தில் தமிழக அரசியல் தொடர்பான எங்கள் புரிதலை மேம்படுத்திக் கொள்வதிலும் இந்த நெடுநடைப் பயணம் பெரிதும் பயனளித்திருப்பது குறித்து மகிழலாம்.
சில குறைகளும் இல்லாமலில்லை. போதிய அவகாசம் தந்து முன்கூட்டியே அறிவித்திருந்தும் போதிய எண்ணிக்கையில் இயக்கத் தோழர்களும், இனவுணர்வாளர்களூம் இந்த நடைப்பயணத்தில் பங்கு பெறவில்லை. தமிழீழம் வேண்டும், தமிழ் வேண்டும், காவிரியும் முல்லைப்பெரியாறும் வேண்டும், தமிழ் நாடே வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டால் போதாது. இந்த நோக்கங்களுக்காகத் தமிழக மக்களைத் திரட்டுவதற்கு உழைக்கவும் அணியமாய் இருக்க வேண்டும். விரும்பி போற்றும் நோக்கங்களுக்காக ஒரு சில நாள் கூட ஒதுக்க முடியாதவர்களை நினைத்து வருத்தப்பட மட்டுமே முடியும்.இந்த நெடுநடைப் பயணத்தை அறிவிக்கும் போதே தமிழ் மீட்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று என அறிவித்தோம். இதற்கு ஒரு கோடி ரூபாய் என்று இலக்கும் வைத்தோம். பயணப் பாதையில் சந்திக்கும் மக்களை மட்டும் நம்பி இந்த இலக்கைக் குறிக்கவில்லை. தமிழக அளவில் ஏன், உலக அளவிலும் கூட தமிழன்பர்கள் தாராளமாகப் பங்களிப்பு செய்வார்கள் என்று நம்பினோம். இந்த நம்பிக்கை இது வரை சிறிதளவும் ஈடேற வில்லை என்பதே உண்மை. பயணப் பரப்பில் இது அறுவடைக் காலம் என்றாலும் பெரிய வளமை எதுவும் காணப்படவில்லை. உண்டியல் ஏந்திக் காசு திரட்டுகிறோம். களத்து மேட்டுக்கே சென்று நெல் வாங்குகிறோம். கொடுக்க மனம் உள்ளவர்களிடம் பணம் இல்லை, பணம் உள்ளவர்களிடம் மனம் இல்லை என்பது ஒன்றும் புதிய செய்தி அல்லவே! இது வரை திரட்டியிருப்பது எல்லாம் நெடுநடைப் பயணத் தேவைகளை நிறைவு செய்வதற்கே போதுமானதாக இருந்துள்ளது. தமிழ் மீட்பு நிதியத்திற்கு எதுவும் மிஞ்சவில்லை. இது வரை தனி ஒருவராக எவரும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தரவில்லை. நெல் கொடுத்த எவரும் நான்கு படிக்கு மேல் தரவில்லை.
தமிழ் மீட்பு நிதியத்திற்கு பணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு எண்களை உலகத் தமிழர்கள் பார்க்கக் கூடிய இணையத்தளங்களில் வெளியிட்டோம். இதுவரை யாரும் பணம் செலுத்தவில்லை.
பணமாகவோ பொருளாகவோ தரலாம் என்று நாங்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு முன்பே பெண்ணாடத்தை சேர்ந்த தோழர் பஞ்சநாதன் தன் குடும்பத்தார் சார்பில் ஒரு கிராம் தங்கம் கொடுத்தார். நெடுநடைப் பயணத்திலும் அவர் நடந்து கொண்டிருப்பது கூடுதல் செய்தி.
தமிழ் மீட்பு நிதியத்திற்கு ஒரு கோடி இலக்கு வைத்தது மிகையோ என்று கூட சிலர் ஐயுறலாம். இல்லை, உண்மையான தேவைகளின் அடிப்படையில்தான் இந்த இலக்கை அறிவித்தோம். பதினாறுஆண்டுக:ளாக நடைபெற்று வரும் அம்பத்தூர் தாய்த் தமிழ் பள்ளிக்கு சொந்த இடமும் கட்டடமும் அவசரத் தேவைகள். இதற்கு மட்டும் குறைந்தது 50 இலட்சம் தேவை. சமூகநீதித் தமிழ் தேசம் ஏட்டை எல்லா நெருக்கடிகளுக்கு இடையிலும் தொடர்ந்து நடத்துவது மட்டும் அல்ல, தமிழ் நாடு முழுக்கக் கொண்டுசேர்க்க வேண்டும். தகுதி வாய்ந்த தோழர்களை முழு நேர ஊழியர்களாக்கித் தமிழ் நாடெங்கும் களத்தில் இறக்கி அரசியல் பணியும் அமைப்புப் பணியும் ஆற்ற வேண்டும். இதையெல்லாம் செய்ய முடியாதென்றால் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
திரைப்பட நடிகர் ஒருவர் தன்னை மற்றொரு நடிகர் ஏழு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்து விட்டதாகக் காவல் துறை ஆனையாளரிடம் முறையீடு செய்கிறார். மற்றொரு நடிகரோ தன் புத்தகத்தை வைத்து கோடிக் கணக்கான ரூபாய்க்கு மோசடி நடந்து விட்டதாகச் சொல்கிறார். ஒரு முன்னாள் அமைச்சர் இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒரு கோடி செலவிட்டதாகச் செய்தி. ஒரு திரைப்படம் தயாரிக்கப் பல கோடிகள் செலவிடுகிறார்கள். கோடிகள் இந்த நாட்டில் சொற்பத் தொகைகள் ஆகியிருக்கும் போது, தமிழ் மீட்பு தமிழர் மீட்பின் உயரிய நோக்கங்களுக்கு ஒரு கோடி திரட்ட நினைப்பது எப்படிக் குற்றமாகும்?
இந்தப் பரந்த உலகில் விரிந்து கிடக்கும் தமிழ்ப் பரப்பில் ஆளுக்கு ஒரு இலட்சம் வீதம் கொடுப்பதற்கு நூறு பேர் இல்லையா? அல்லது பத்தாயிரம் வீதம் கொடுப்பதற்கு ஆயிரம் பேர் இல்லையா?
எமது இலக்கில் உறுதியாக உள்ளோம். ஆயிரம் கிலோ மீட்டர் நடப்பது போதாதென்றால் பத்தாயிரம் கிலோ மீட்டர் நடப்போம். கோடிக் கணக்கான தமிழ் மக்களைத் தேடி சென்று பார்ப்பது எமக்கு இனிமையே தரும்.
இந்த நெடுநடைப் பயணம் இன்னும் பாதி அளவு மீதம் உள்ளது. இது வரை நடக்க வராத தமிழர்களும் தமிழச்சிகளும் இனியும் கூட நடக்க வரலாம். அரியதொரு வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது.
தமிழ் மீட்பு நிதியமும் நல்ல உள்ளங்களின் நன்கொடைக்காக காத்துள்ளது. நீங்கள் தரும் ஒவ்வொரு காசும் தமிழ் மீட்பு தமிழர் மீட்புப் போராட்டத்தில் வலியதொரு படைக் கருவியாகப் பயன்படும்..
நன்றி! உங்கள் மறுமொழிக்காக காத்துள்ளேன்.
உரிமையுடன்,
தியாகு
(17.02.2010)
குறிப்பு:
G.Natarajan,
State Bank of India,
Thanjavur branch,
savings bank account number: 10857678873.
IFSC code : SBIN0000924
Contact number: 0091- 92831 10603, 0091- 97919 58888
E-Mail: thozharthiagu@gmail.com, tamilmeetpu@gmail.com
Contact number: 0091- 92831 10603, 0091- 97919 58888
E-Mail: thozharthiagu@gmail.com, tamilmeetpu@gmail.com

No comments:
Post a Comment