தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Saturday, February 27, 2010

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நடைபயணம் 2010 - தோழர் தியாகுவின் மயிலாடுதுறை உரை

பதிவிறக்கிக் கேட்க :

Friday, February 26, 2010

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நடைபயணம் 2010 - தோழர் தியாகுவின் கோடியக்கரை தொடக்க உரை காட்சி வடிவில்

பதிவிறக்கிக் கேட்க :

http://www.mediafire.com/file/tumdjyz1eym/nadai payana thodakkam.avi

Wednesday, February 24, 2010

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் - நீடாமங்கலம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு பேச்சு



பதிவிறக்கிக் கேட்க :

http://www.mediafire.com/?sharekey=9e4b689472e1cca1b9fe86fa3433a2e7e66d683285c182b84eb74d8a6cde9cae

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் - ஒரத்தநாடு பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு பேச்சு

பதிவிறக்கிக் கேட்க :

http://www.mediafire.com/file/vmmt1mmiyun/thiyagu oraththanadu.rar

Wednesday, February 17, 2010

நெடுநடைப் பயணத்தின் நடுப்புள்ளி - தோழர் தியாகு

இன்று (2010 பிப்ரவரி 17) தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் 24ஆம் நாள். இப்போது அம்மையப்பனில் இருக்கிறோம். இங்கிருந்து திருவாரூர் செல்ல வேண்டும். நாகை மாவட்டம் முடிந்தது. திருவாரூர் மாவட்டத்தில் ஒரு பாதி முடிந்தது. மறு பாதியை முடித்து தஞ்சாவூர் மாவட்டத்தையும் முடிக்கும் போது 47 நாள் முடிந்திருக்கும். மார்ச் 12 குடந்தையில் நிறைவு.
ஆக, கால வகையிலும் தொலைவு வகையிலும் நெடுநடைப் பயணத்தின் நடுப்புள்ளியில் நிற்கிறோம். சற்றே நின்று பின்னோக்கவும் முன்னோக்கவும் இதுவே தக்க தருணமாக இருக்கக் கூடும்.
தமிழ் மீட்பு தமிழர் மீட்புக் கோரிக்கைகளைப் பரப்புரை செய்வதிலும், மக்களிடமிருந்து அவர்களின் குறைகள்-கோரிக்கைகளை அறிந்து கொள்வதிலும், பயணக் குழுவில் இடம் பெற்றுள்ள நாங்களே எங்களைப் பக்குவப்படுத்திக் கொள்வதிலும், பழைய உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதிலும், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதிலும், தமிழீழப் போராட்டம் தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகளைத் தெரிந்து கொள்வதிலும், பயணப் பரப்பின் சமூக-அரசியல் சூழலைப் பயில்வதிலும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் செயல்படும் விதத்தைத் தெரிந்து கொள்வதிலும், மொத்தத்தில் தமிழக அரசியல் தொடர்பான எங்கள் புரிதலை மேம்படுத்திக் கொள்வதிலும் இந்த நெடுநடைப் பயணம் பெரிதும் பயனளித்திருப்பது குறித்து மகிழலாம்.
சில குறைகளும் இல்லாமலில்லை. போதிய அவகாசம் தந்து முன்கூட்டியே அறிவித்திருந்தும் போதிய எண்ணிக்கையில் இயக்கத் தோழர்களும், இனவுணர்வாளர்களூம் இந்த நடைப்பயணத்தில் பங்கு பெறவில்லை. தமிழீழம் வேண்டும், தமிழ் வேண்டும், காவிரியும் முல்லைப்பெரியாறும் வேண்டும், தமிழ் நாடே வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டால் போதாது. இந்த நோக்கங்களுக்காகத் தமிழக மக்களைத் திரட்டுவதற்கு உழைக்கவும் அணியமாய் இருக்க வேண்டும். விரும்பி போற்றும் நோக்கங்களுக்காக ஒரு சில நாள் கூட ஒதுக்க முடியாதவர்களை நினைத்து வருத்தப்பட மட்டுமே முடியும்.
இந்த நெடுநடைப் பயணத்தை அறிவிக்கும் போதே தமிழ் மீட்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று என அறிவித்தோம். இதற்கு ஒரு கோடி ரூபாய் என்று இலக்கும் வைத்தோம். பயணப் பாதையில் சந்திக்கும் மக்களை மட்டும் நம்பி இந்த இலக்கைக் குறிக்கவில்லை. தமிழக அளவில் ஏன், உலக அளவிலும் கூட தமிழன்பர்கள் தாராளமாகப் பங்களிப்பு செய்வார்கள் என்று நம்பினோம். இந்த நம்பிக்கை இது வரை சிறிதளவும் ஈடேற வில்லை என்பதே உண்மை. பயணப் பரப்பில் இது அறுவடைக் காலம் என்றாலும் பெரிய வளமை எதுவும் காணப்படவில்லை. உண்டியல் ஏந்திக் காசு திரட்டுகிறோம். களத்து மேட்டுக்கே சென்று நெல் வாங்குகிறோம். கொடுக்க மனம் உள்ளவர்களிடம் பணம் இல்லை, பணம் உள்ளவர்களிடம் மனம் இல்லை என்பது ஒன்றும் புதிய செய்தி அல்லவே! இது வரை திரட்டியிருப்பது எல்லாம் நெடுநடைப் பயணத் தேவைகளை நிறைவு செய்வதற்கே போதுமானதாக இருந்துள்ளது. தமிழ் மீட்பு நிதியத்திற்கு எதுவும் மிஞ்சவில்லை. இது வரை தனி ஒருவராக எவரும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தரவில்லை. நெல் கொடுத்த எவரும் நான்கு படிக்கு மேல் தரவில்லை.
தமிழ் மீட்பு நிதியத்திற்கு பணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு எண்களை உலகத் தமிழர்கள் பார்க்கக் கூடிய இணையத்தளங்களில் வெளியிட்டோம். இதுவரை யாரும் பணம் செலுத்தவில்லை.
பணமாகவோ பொருளாகவோ தரலாம் என்று நாங்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு முன்பே பெண்ணாடத்தை சேர்ந்த தோழர் பஞ்சநாதன் தன் குடும்பத்தார் சார்பில் ஒரு கிராம் தங்கம் கொடுத்தார். நெடுநடைப் பயணத்திலும் அவர் நடந்து கொண்டிருப்பது கூடுதல் செய்தி.
தமிழ் மீட்பு நிதியத்திற்கு ஒரு கோடி இலக்கு வைத்தது மிகையோ என்று கூட சிலர் ஐயுறலாம். இல்லை, உண்மையான தேவைகளின் அடிப்படையில்தான் இந்த இலக்கை அறிவித்தோம். பதினாறுஆண்டுக:ளாக நடைபெற்று வரும் அம்பத்தூர் தாய்த் தமிழ் பள்ளிக்கு சொந்த இடமும் கட்டடமும் அவசரத் தேவைகள். இதற்கு மட்டும் குறைந்தது 50 இலட்சம் தேவை. சமூகநீதித் தமிழ் தேசம் ஏட்டை எல்லா நெருக்கடிகளுக்கு இடையிலும் தொடர்ந்து நடத்துவது மட்டும் அல்ல, தமிழ் நாடு முழுக்கக் கொண்டுசேர்க்க வேண்டும். தகுதி வாய்ந்த தோழர்களை முழு நேர ஊழியர்களாக்கித் தமிழ் நாடெங்கும் களத்தில் இறக்கி அரசியல் பணியும் அமைப்புப் பணியும் ஆற்ற வேண்டும். இதையெல்லாம் செய்ய முடியாதென்றால் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
திரைப்பட நடிகர் ஒருவர் தன்னை மற்றொரு நடிகர் ஏழு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்து விட்டதாகக் காவல் துறை ஆனையாளரிடம் முறையீடு செய்கிறார். மற்றொரு நடிகரோ தன் புத்தகத்தை வைத்து கோடிக் கணக்கான ரூபாய்க்கு மோசடி நடந்து விட்டதாகச் சொல்கிறார். ஒரு முன்னாள் அமைச்சர் இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒரு கோடி செலவிட்டதாகச் செய்தி. ஒரு திரைப்படம் தயாரிக்கப் பல கோடிகள் செலவிடுகிறார்கள். கோடிகள் இந்த நாட்டில் சொற்பத் தொகைகள் ஆகியிருக்கும் போது, தமிழ் மீட்பு தமிழர் மீட்பின் உயரிய நோக்கங்களுக்கு ஒரு கோடி திரட்ட நினைப்பது எப்படிக் குற்றமாகும்?
இந்தப் பரந்த உலகில் விரிந்து கிடக்கும் தமிழ்ப் பரப்பில் ஆளுக்கு ஒரு இலட்சம் வீதம் கொடுப்பதற்கு நூறு பேர் இல்லையா? அல்லது பத்தாயிரம் வீதம் கொடுப்பதற்கு ஆயிரம் பேர் இல்லையா?
எமது இலக்கில் உறுதியாக உள்ளோம். ஆயிரம் கிலோ மீட்டர் நடப்பது போதாதென்றால் பத்தாயிரம் கிலோ மீட்டர் நடப்போம். கோடிக் கணக்கான தமிழ் மக்களைத் தேடி சென்று பார்ப்பது எமக்கு இனிமையே தரும்.
இந்த நெடுநடைப் பயணம் இன்னும் பாதி அளவு மீதம் உள்ளது. இது வரை நடக்க வராத தமிழர்களும் தமிழச்சிகளும் இனியும் கூட நடக்க வரலாம். அரியதொரு வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது.
தமிழ் மீட்பு நிதியமும் நல்ல உள்ளங்களின் நன்கொடைக்காக காத்துள்ளது. நீங்கள் தரும் ஒவ்வொரு காசும் தமிழ் மீட்பு தமிழர் மீட்புப் போராட்டத்தில் வலியதொரு படைக் கருவியாகப் பயன்படும்..
நன்றி! உங்கள் மறுமொழிக்காக காத்துள்ளேன்.
உரிமையுடன்,
தியாகு
(17.02.2010)

குறிப்பு:
G.Natarajan,
State Bank of India,
Thanjavur branch,
savings bank account number: 10857678873.
IFSC code : SBIN0000924
Contact number: 0091- 92831 10603, 0091- 97919 58888
E-Mail: thozharthiagu@gmail.com, tamilmeetpu@gmail.com

Friday, February 12, 2010

தமிழ் மீட்பு தமிழர் மீட்புக்காக மக்களைச் சார்ந்து இயங்குவோம் - தோழர் தியாகு

(தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் 12ஆம் நாளில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற வரவேற்புப் பொதுக்கூட்டத்தில் பயணக் குழுவின் தலைவரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் தியாகு பேசியதின் சுருக்கம்)
ஈழத் தமிழர்கள் இனப் படுகொலைக்கும் முழுப் பேரழிவுக்கும் ஆளான நிகழ்வு உலகத் தமிழர்கள் அனைவரையும் உலுக்கி விட்டது. கொடும் படுகொலை நிகழப் போவது தெரிந்து அதைத் தடுப்பதற்கான முய\ற்சியில் நாம் அனைவரும் ஈடுபட்டோம். போரை நிறுத்து என்று தமிழ்ச் சமுதாயம் ஒரே குரலில் முழங்கியது. உலக நாடுகளில் எல்லாம் தமிழர்கள் போரடினார்கள். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டித் தீர்மானம் இயற்றினோம், மனித சங்கிலி அமைத்தோம். சட்டப் பேரவையில் மூன்று முறை தீர்மானம் இயற்றினோம். நாடளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று எச்சரித்தோம். தில்லிக்கு அனைத்துக் கட்சித் தூது அனுப்பினோம். எல்லாக் கட்சிகளும் – காங்கிரசைத் தவிர - தனித் தனியாகவோ கூட்டாகவோ போராடின. எதற்கும் தில்லி செவி சாய்க்காத போது முத்துக்குமார் தொடங்கி 16 தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்தனர். வெளிநாடுகளிலும் தமிழர்கள் தீக்குளித்தனர். ஆனால் எந்தக் கட்டதிலும் இந்தியா போரை நிறுத்தச் சொல்ல வில்லை. ஒப்புக்குக் கூட அப்படிக் கேட்கவில்லை. இந்தியா போரை நிறுத்தும் படி எந்தக் கட்டத்திலும் வேண்டுகோள் விடுக்க வில்லை என்பதை சிங்கள ஆட்சியாளர்களே தெளிவுபடுத்திவிட்டார்கள். போரை நிறுத்தச் சொல்ல வில்லை என்பது மட்டும் அல்ல, ஆயுதம் கொடுத்தும் நிதி கொடுத்தும் ஊக்கம் கொடுத்தும் உலக அரங்கில் எழக் கூடிய கண்டனங்களிலிருந்து பாதுகாத்தும் இந்தியா போருக்கு உதவி செய்தது என்பதே உண்மை. சிங்களத்துடன் ஒருங்கிணைந்து போரை வழிநடத்தியது இந்தியாதான் என்பதை கோத்தபய ராஜபக்சே வெளிப்படையாகச் சொன்னார். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்றார் மகிந்த ராஜபக்சே.

ஆறரைக் கோடித் தமிழர்களைத் தன் குடிமக்களாக உரிமை கோரும் இந்தியாவால் எவ்வாறு இப்படிச் செய்ய முடிந்தது? இந்தியா இப்படிச் செய்வதை நம்மால் தடுக்க முடியாமல் போனது ஏன்? ஒன்றரைக் கோடிச் சிங்களவர் பேரில் நடைபெறும் அரசு பத்துக் கோடி உலக தமிழர்களைத் தோற்கடிக்க முடிந்தது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு நாம் விடைக காண வேண்டும்.

ஒரு புதிய கோணத்திலிருந்து பார்த்தால்தான் நமக்கு விடை கிடைக்கும். போரை நிறுத்தச் சொல்வதற்காக இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பும் படி திரும்பத் திரும்ப மன்றாடினோம் அல்லவா? தமிழகத்திற்கென்று ஓர் அயலுரவுத் துறை அமைச்சர் இருந்திருந்தால் நாமே அவரை அனுப்பியிருக்கலாமே! இந்திய அரசு சிங்கள அரசுக்குப் படைக் கலனும் படைப் பயிற்சியும் கொடுக்கக் கூடாது என்றோம். மீறி அவர்கள் கொடுத்த போது நாமே ஈழ தமிழர்களுக்கு அவற்றைக் கொடுக்க முடிந்திருந்தால் எப்படி இருக்கும்? ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் மற்ற சர்வதேச அரங்குகளிலும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு முட்டு கொடுத்த போது தமிழர் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க நம் சார்பில் பேசுவதற்கு ஒருவர் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? சுருங்க சொன்னால், தமிழகம் இறைமை கொண்டதாக இருந்திருந்தால் நம்மால் இந்த இனக் கொலைப் போரை தடுத்திருக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன். தமிழகம் இறைமை இழந்து அடிமைப்பட்டுக் கிடப்பதை ஈழத் தமிழர்கள் தொடர்பான நம் இயலாமை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்தி விட்டது.

சைப்ரஸ் நாட்டில் துருக்கியர்கள் தாக்கப்பட்ட போது துருக்கி தலையிட்டு அவர்களைப் பாதுகாக்க முடிந்ததற்கும், ஈழத் தமிழர்களை நாம் அப்படிப் பாதுகாக்க முடியாமல் போனதற்கும் துருக்கியின் இறைமையும் தமிழகத்தின் இறைமையின்மையுமே அடிப்படைக் காரணம்.

அப்படியானால் தமிழகம் விடுதலை பெற்ற பிறகுதான் தமிழீழ விடுதலைக்குத் துணை செய்ய முடியுமா? இல்லை. இப்போதே துணை செய்ய முடியும். ஆனால் தமிழகத்தின் இறைமை மீட்புக்காகப் போராடுவதின் மூலமே அதைச் செய்ய முடியும். மற்றொன்றையும் நினைவிற் கொள்ள வேண்டும் என்னவென்றால், தமிழீழத்திற்கான போராட்டம் மட்டுமே ஒரு நிலையான தமிழ்த் தேசிய எழுச்சியை தோற்றுவித்து விடாது. தமிழர்கள் விழிப்புற்று எழுந்து போராடுவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. இன்றளவும் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி ஆவதும் கல்வி மொழி ஆவதும் நீதி மொழி ஆவதும் முழுமை பெறவில்லை. இந்தியும் ஆங்கிலமும் கோலோச்சுகின்றன. இந்தித் திணிப்புக்கு வகை செய்யும் அரசமைப்புச் சட்டம் 17ஆவது பகுதியை எதிர்த்துப் போரடியவர்கள்தான் இப்போது தமிழகத்தில் ஆட்சி புரிகின்றனர். இந்திய அரசிலும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆனால் 17ஆவது பகுதியில் ஒரு வாக்கியம், ஒரு வார்த்தை, ஒரு எழுத்தை கூட அவர்களால் மாற்ற முடியவில்லை. அது பற்றி அவர்களுக்குக் கவலையும் இல்லை. முதலமைச்சரிம் மகன் நடுவண் அரசில் அமைச்சராக இருக்கிறார். நாடளுமன்ற மக்களவையில் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தமிழில் பதில் சொல்ல அவருக்கு உரிமை இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் காஞ்சிபுரத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவு மாநாட்டை நடத்தி எட்டு சம்பிரதாயத் தீர்மானங்களை நிறைவேற்றியது. அதற்குப் பதிலாக தாய் மொழியில் பேசும் உரிமை இல்லாத அமைச்சர் பதவியைத் துறப்பதாகச் செயலுக்குரிய ஒற்றைத் தீர்மானம் இயற்றி யிருந்தால் நாம் மனமாரப் பாராட்டி இருப்போம்.

தமிழ் நாட்டில் தமிழைக் கல்வி மொழியாக்க வேண்டும் என்பதைக் கொள்கையளவில் கூட தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வில்லை. சமச்சீர் கல்வி என்ற ஒன்றை அரசு இப்போது அறிமுகப்படுத்தவுள்ளது. ஆனால், ஆங்கிலம், தமிழ் இரண்டில் எது வேண்டுமானாலும் பயிற்று மொழியாக இருக்கலாமாம். அனைவரும் கட்டாயம் தமிழ்ப் படிக்க வேண்டும் என்று சமச்சீர் கல்வி அறிக்கை கூறுகிறது. ஆனால் ஆங்கிலத்தை எந்த வகுப்புக்கு பின் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இல்லை. ஆகவே கல்வி மொழி பள்ளிக்கு பள்ளி மாறுபடும் என்று தெரிகிறது. இது எப்படி சமச்சீர் கல்வி ஆகும்?. மேலும் சிலருக்கு இலவயக் கல்வி, சிலருக்கு கட்டணக் கல்வி… இது எப்படி சமச்சீர் கல்வி ஆகும்? சிலருக்கு மாநில கல்வி திட்டம், சிலருக்கு மத்தியக் கல்வி திட்டம்… இது எப்படி சமச்சீர் கல்வியாகும்?

கல்வி பெறுவது மக்கள் உரிமை, கல்வி கொடுப்பது அரசின் கடமை என்பதை ஆட்சியாளர்கள் ஏற்று நடைமுறைபடுத்தும் வரை சமச்சீர் கல்வி எட்டா கனியாகவே இருக்கும்.

தமிழகத்தை இலவயங்கள் ஆளும் காலம் இது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இலவயம்! கலைஞர் தொலைக்காட்சி இலவயம்! அதில் மானாட மயிலாடக் காண்பது இலவயம்! அடுப்பு இலவயம்! புடவையும் வேட்டியும் இலவயம்! அடுத்த தேர்தலில் செல்பேசி இலவயம் என்ற வாக்குறுதி கூட வரலாம். இந்த இலவயப் புழுதியில் நம் இலவயக் கல்வி பறிபோய் விட்டதே கவனித்தீர்களா? கல்வி நிலையம் நடத்த வேண்டிய அரசு சாராயக் கடை நடத்துகிறது. கள்ளச் சாராயப் பேர்வழிகள் கல்வித் தந்தைகளாகி விட்டார்கள். அவர்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்துகிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் அவல நிலைக்கு இது தெளிவான சான்று. பிரித்தானிய ஆட்சியாளர்கள் அபினியைப் புகுத்தி மக்களை போதைக்கு அடிமை ஆக்கியதற்கும் இன்று நம் ஆட்சியாளர்கள் நம்மைக் குடியால் கெட்ட தமிழ்க் குடி ஆக்கி கொண்டிருப்பதற்கும் என்ன வேறுபாடு? வருமானத்திற்காக எதையும் செய்யலாம். என்பது ஒழுக்கமுள்ள அரசின் கொள்கையாக இருக்க முடியாது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் உரிமை வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வருகிறோம் அரசமைப்புச் சட்டத்திலேயே இதற்கு இடம் இருப்பதையும் சுட்டிக்காட்டினோம் தமிழகச் சட்டப் பேரவையில் இதற்காக ஒரு மனதான தீர்மானமும் இயற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்திய அரசு இதற்கு மறுப்புச் சொல்லி விட்டது. அதற்கு மேல் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தமிழை ஆட்சி மொழியாக்க முடியாமல், கல்வி மொழியாக்க முடியாமல், நீதி மொழியாக்க முடியாமல்… செம்மொழித் தகுதி மட்டும் பெறுவதால் என்ன பயன்? இது பட்டினி கிடப்பவனுக்குப் பட்டாடை போர்த்துவதைப் போன்றது. கருணாநிதி தன் இரண்டகத்தை மறைப்பதற்காகக் கோவையில் செம்மொழி மாநாடு கூட்டுகிறார். முதலில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதாக அறிவித்து, அது முடியவில்லை என்றதும் செம்மொழி மாநாடு என்று மாற்றிக் கொண்டார். இதுவும் முடியா விட்டால் மும்மொழி மாநாடோ கனிமொழி மாநாடோ நடத்துவார். எப்படியோ தன் கிழிந்த பேருக்கு ஒட்டுப்போட அவசரமாக அவருக்குத் தேவை ஓர் ஆடம்பர மாநாடு.

நம் தமிழினம் மொழி உரிமையை இழந்து நிற்பதையே இவை அனைத்தும் காட்டுகின்றன. மொழி உரிமை மட்டும் அல்ல, நம் மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மறுக்க ஒரு புதிய சட்டமே வருகிறது. இதில் சிங்கள அரசுக்கும் இந்திய அரசுக்கும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள்! சிங்கள அரசு பாதுகாப்பைக் காரணம் காட்டித் தமிழீழ மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்குத் தடையே விதித்தது. 2002 போர்நிறுத்த உடன்பாட்டில் புலிகள் வலியுறுத்தியதால் இந்தத் தடையை நீக்க சிங்கள அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் இந்த உடன்பாட்டை அது செயாலாக்கவே இல்லை. அமைதி குலைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இப்போது இந்திய அரசும் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மைச் சட்டம் கொண்டு வருவதற்குப் பாதுகாப்பை ஒரு காராணமாகக் காட்டுகிறது. சிங்கள அரசு, இந்திய அரசு இரண்டுமே அதனதன் ஆதிக்கத்தில் உள்ள மீனவத் தமிழர்களின் வாழ்வுரிமையை மறுக்கின்றன. இத்தனைக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழீழத்திற்கும் இடைப்பட்ட கடல் தமிழர் கடல்தானே தவிர இந்தியக் கடலோ சிங்களக் கடலோ அல்ல. தமிழர் கடலில் தமிழர்கள் மீன்பிடிக்க இந்திய, சிங்கள நாட்டாண்மை ஏன்? தமிழகத்துக்கும் தமீழீழத்திற்கும் இடைப்பட்ட கடலில் எல்லைக் கோடு தேவையில்லை. எப்படியும் எல்லைக் கட்டுப்பாடு தேவையில்லை.

சிங்களக் கடற்படை நம் மீனவர்கள் கிட்டத்தட்ட 500 பேரைச் சுட்டுக் கொன்ற போதும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மும்பையைப் பயங்கரவாதிகள் தாக்கிய போது போர் முழக்கம் செய்த இந்தியா… இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களை சிங்கள அரசுப் படையே திரும்பத் திரும்ப தாக்கிய போது எச்சரிக்கை கூட விடுக்கவில்லையே , ஏன்? பாகிஸ்தான் உனக்குப் பகைநாடு, சிங்களன் மட்டும் பங்காளியா? நம் மீனவர்களை இந்தியா பாதுகாக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தால் பயனில்லை. தமிழக முதல்வர் சொன்னாரே, மீனவர் கை மீன்பிடித்துக் கொண்டு மட்டுமே இருக்காது என்று… அப்படியானால் மீனவர்கள் தம்மைத் தாமே காத்துக் கொள்வதற்கு ஆயுதம் கொடுங்கள். எல்லைப் பாதுகாப்புப் படை போல் தமிழக மீனவர் தற்காப்புப் படை அமைத்திருங்கள் என க் கோருகிறோம்.

தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இந்தியா எடுத்துச் சிங்களனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது எவ்வகையில் நியாயம்? கச்சத் தீவை மீட்க வேண்டுமானால், இந்தியாவுக்கும் இலங்கைக்குமான ஒப்பந்தத்தை நீக்கம் செய்ய வேண்டும். அதற்கு நாம் இந்தியாவை நெருக்க வேண்டும். இது முடிந்து போன பிரச்சனை என்கிறார் எஸ். எம். கிருஷ்ணா. கச்சத் தீவும் முடிந்து போன பிரச்சனை அல்ல. தமிழ்நாடு இந்தியாவில் இருப்பதும் முடிந்து போன பிரச்சனை அல்ல.

மீன்பிடித் தடைச் சட்டமானாலும் நம் மீனவரின் மீது சிங்களக் கடற்படைய்ன் தாக்குதல் ஆனாலும், கச்சத் தீவு ஆனாலும்… வெரும் மீனவர் பிரச்சனை என்று பார்க்கக் கூடாது. தமிழர் பிரச்சனை, தமிழர்களின் இனப் பிரச்சனை என்று புரிந்துக் கொண்டால் தான், அந்தக் கோணத்திலிருந்து போராடினால் தான் நிலையான தீர்வு கிடைக்கும்.

உழவர்களுக்குள்ள சிக்கல்களும் இப்படிதான். எல்லாவற்றிலும் முதன்மையானது ஆற்று நீர்ச் சிக்கல். காவிரி உரிமை பறிபோய் விட்டது. போனது போனதுதான் என்று நம்மை ஆற்றுப்படுத்துவதுதான் ஆட்சியாளர்களின் முயற்சி. காவிரித் தீர்ப்பாயம் தீர்ப்புச் சொல்லி மூன்றாண்டு ஆகிறது. அது நமக்கு நிறைவு தரும் தீர்ப்பல்ல. ஆனால் அதையும் கூட கிடப்பில் போட்டு விட்டார்கள். முல்லைப் பெரியாற்றில் நமக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியாளர்களுக்குத் துப்பில்லை. இப்போது பழைய படி உச்சநீதி மன்றக் கிணற்றில் போட்ட கல்லாகி விட்டது.; பாலாறு, பவானி, அமராவதி என்று புதுப் புதுச் சிக்கல்கள் முளைத்த வண்ணமுள்ளன. இவற்றையெல்லாம் உழவர் பிரச்சனையாகவோ, ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களின் பிரச்சனையாகவோ கருதினால் தீர்வு கிடைக்காது. இவற்றைத் தமிழர் பிரச்சனையாக, தமிழ்த் தேசிய இனத்தின் சிக்கலாகப் புரிந்து கொண்டு அதனடிப்படையில் போராட வேண்டும்.

தமிழ் மக்களின் வாழ்வுரிமைச் சிக்கல்கள் மீது போராடுவதன் வாயிலாகவே தமிழ் உரிமைக்காகவும் தமிழர் இன உரிமை ஆகிய தமிழ்த் தேசத்தின் தன்தீர்வுரிமைக்காகவும் வெகு மக்களை அணி திரட்ட இயலும். இதையே தமிழ் உரிமை, தமிழர் இன உரிமை, தமிழ் மக்கள் வாழ்வுரிமை என்ற நெடுநடைப் பயண முழக்கம் குறிக்கிறது. தமிழை மீட்பதற்காகவும் தமிழரை மீட்பதற்காகவும் நடத்தப்படும் போராட்டம் தமிழக மீட்புக்கான போராட்டமாக வளர்ந்து செல்லும். இது மிகக் கடினமான பணி என்பதை உணர்ந்துள்ளோம். ஆனால் வேறு வழியில்லை.

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு இயக்கம் முழுக்க முழுக்க மக்களைச் சார்ந்து நடத்தப்பட வேண்டும். இந்த நெடுநடைப் பயணத்திற்காக மட்டும் அல்ல, தொடர்ச்சியான நம் அரசியல் பயணத்திற்கும் மக்களைச் சார்ந்து, அவர்களிடம் இருந்து ஊக்கமும் ஊட்டமும் பெற்று இயங்கியாக வேண்டும். நல்ல நோக்கங்களுடன் தொடங்கிய பல அமைப்புகள் அவற்றின் பொருள் வளத்திற்கு மக்களை சார்ந்திருக்காமல் ஒரு சில புரவலர்களை சார்ந்து நிற்கப் போய் தடம் புரண்ட பட்டறிவை நாம் மறந்துவிடக் கூடாது. வெகு மக்களே நம் புரவலர்கள். அவர்களிடமிருந்து சிறுக சிறுகத் திரட்டும் பொருல் வளத்தைக் கொண்டே நம் பணிகளை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்ற முடியும். இந்த நம்பிக்கையோடு தான் இந்த நெடுநடைப் பயணத்தின் ஊடாக தமிழ் மீட்பு நிதியம் என்ற ஒன்று ஏற்படுத்தவுள்ளோம். தாய்த் தமிழ் பள்ளிகளுக்காகவும் தமிழ் தேசம் ஏட்டிற்காகவும் நம் இயக்க பணிகளுக்காகவும் இந்த நிதியத்தை பயன்படுத்திக் கொள்வோம். இதற்கு இந்த நெடுநடைப் பயணப் பாதையில் நாம் சந்திக்கும் மக்களிடமிருந்து மட்டுமல்லாமல், தமிழகமெங்கும் உள்ள மக்களிடமிருந்தும், அதே போல் உலகத் தமிழரிடமிருந்தும் பங்களிப்பு வேண்டுகிறோம்.

மக்களைச் சார்ந்து நிற்பது பொருள் வளத்திற்காக மட்டும் அல்ல, அறிவு வளத்திற்காகவும்தான். மக்களிடமிருந்து அவர்களுடைய வாழ்வுரிமைச் சிக்கல்களைக் கற்றுக் கொண்டுதான் அவர்களின் கோரிக்கைகளையும் அவற்றுக்கான போராட்ட வடிவங்களையும் நம்மால் வகுக்க முடியும். இந்தப் பயணத்தின் நோக்கங்களில் இது முதன்மையானது. மக்களைக் கற்போம், அவர்களிடமிருந்து கற்போம், பிறகுதான் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் தகுதி நமக்கு வரும். தமிழ் மீட்பு தமிழர் மீட்புக்காக நெடுநடைப் பயணம் மேற்கொண்டிருக்கும் போதும் சரி, இதற்கான நீண்ட புரட்சிப் பயணத்தில் தொடர்ந்து முன் செல்லும் போதும் சரி மக்கள் சார்ந்த அணுகு முறையை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். நாம் போராடுவது மக்களுக்காகவே என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மக்களின் ஆதரவும், அதற்கும் மேலே பங்கேற்பும் இல்லாமல் என்ன முயன்றாலும் நம்மால் வெற்றி பெற முடியாது.

Thursday, February 11, 2010

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப்பயனம்-2010 தொடர்கிறது

பயணக் குழுவினர் பத்தாம் நாள் 03.02.2010 காலை நன்னிலத்திலிருந்து புறப்பட்டனர். நன்னிலத்தில் ம.தி.மு.க நண்பர்களோடும் தமிழின நண்பர்களோடும் சேர்ந்து பயணக் குழுவினர் தங்குவதற்கும் உண்ணுவதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்த தி.மு.க வினர் காலையில் பயணக் குழு புறப்படும் வரை உடன் இருந்து உதவினர். திருமருகலிலும் திருக்கண்ணபுரத்திலும் அ.தி.மு.க வினர் உதவியதும் நன்னிலத்தில் தி.மு.க வினர் உதவியதும் கட்சி கடந்த தமிழின உணர்வின் அடையாளம் ஆகும்.



பத்தாவது நாள் பயணம் சன்னாநல்லூர், பூந்தோட்டம், இஞ்சிக்குடி, பேரளம் வழியாக கொல்லுமாங்குடி சென்றடைந்தது. வணிகர்களும் பொதுமக்களும் தமிழ் மீட்பு நிதியத்திற்கு உண்டியலில் பணம் போட்டனர். பல இடங்களில் உழவர்கள் நெல் கொடுத்தனர்.



பதினொன்றாம் நாள் பயணம் மாங்குடி, பில்லூர், பொதும்பூர், கழனிவாசல் வழியாகச் சென்று மாலையில் நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம் மங்கைநல்லூரை அடைந்தது. ம.தி.மு.க மாவட்டச் செயலாலர் மகாலிங்கம், குத்தாலம் வட்டச் செயலாளர் மோகன் மற்றும் பல ம.தி.மு.கவினர் பயணக் குழுவினரை வரவேற்றுச் சிறப்பித்தனர்.





பன்னிரண்டாம் நாள் 05.02.2010 நெடுநடைப் பயணக் குழுவினர் எழுமங்கலம் வழியாக மயிலாடுதுறைக்குள் நுழைந்து நாள் முழுக்கப் பரப்புரை செய்து நிதி சேர்த்தனர். அன்று மாலை தமிழின ஆதரவாளர்கள் சார்பில் சின்னக் கடைத் தெருவில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்திற்கு மதிமுக நகரச் செயலாளர் தங்க பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த நாக.ரகுபதி, மதிமுக மவட்டச் செயலளர் மகாலிங்கம்,தமிழர் உரிமை மீட்பு இயக்க அமைப்பாளர் முரளிதரன் மற்றும் பலர் உரையாற்றினர்.


பேரசிரியர் த. செயராமன் நெடுநடைப் பயணக் குறிக்கோள்களை ஆதரித்து சிறப்புரை ஆற்றினார். காவிரிச் சிக்கலில் தமிழகம் வஞ்சிக்கப்பட்ட செய்தியை விரிவாக எடுத்துரைத்தார். தோழர் பெ. மணியரசன் நிறைவுரை ஆற்றுகையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சி பெறும், அப்போது தமிழகத்திற்காகவும் போராட இளைஞர்கள் அணியமாக வேண்டும் என்றார்.







Friday, February 5, 2010

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு புகைப்படங்கள் -25.01.10 முதல்03.02.2010