தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Tuesday, January 26, 2010

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம்



தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் 2010

திட்டமிட்டபடி 25.01.2010 திங்கள் மொழிப்போர் ஈகியர் நினைவு நாளன்று கோடியக்கரையிலிருந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியகு தலைமையில் நெடுநடைப் பயணம் புறப்பட்டது. நெடுநடைப் பயணத்தைக் கோடியக்கரையைச் சேர்ந்த பெரியவர் சீத்தராமன் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இவர் இல்லத்தில் தான் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் 80களில் தங்கிப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ம.தி.மு.க வழக்குரைஞர் காசிநாதன் பாரதி, பொன்னுசாமி, வாய்மேடு அதியமான் ஆகியோர் நெடுநடைப் பயணத்தை வாழ்த்திப் பேசினார்.

நெடுநடைப் பயணம் வேதாரண்யம் வழியாக இரவு 8 மணி அளவில் ஆயக்காரன்புலத்தை வந்தடைந்தது. அங்குப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பகுதி ம.தி.மு.க முன்னணித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு நெடுநடைப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினர்.முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்என்ற கலைச்செல்வன் எழுதிய முத்துக்குமார் வாழ்க்கை வரலற்று நூலைத் தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் பரந்தாமன் வெளியிட்டு உரையாற்றினார். இந்நூல் முத்துக்குமார் பற்றிய வெளிவராத பல செய்திகளைக் கொண்டுள்ளது. முத்துக்குமார் தன் கைப்பட எழுதிய கவிதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பொதுக்கூட்டத்தின் நிறைவாகத் நெடுநடைப் பயணத் தலைவர் தோழர் தியாகு பயணத்தின் குறிக்கோள்களை விளக்கிச் சிறப்புரையாற்றினார்.

தியாகு தமது உரையில் ஈழத்தமிழர் இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கை விரிவாக எடுத்துரைத்து, மகிந்த இராசபட்சா, சரத் பொன்சேகா ஆகிய இருவர் மட்டும் போர்க்குற்றவாளிகள் அல்லர், மன்மோன் சிங்கும், சோனியாவும் போர்க்குற்றவாளிகளே என்றார். இவ்வினப் படுகொலைக்குத் தி.மு.கவும் அதன் தலைவர் கருணாநிதியும் துணைபோன துரோகத்தையும் அம்பலப்படுத்தினார். இறையான்மை உள்ள நாடாகத் தமிழ்நாடு இருந்திருப்பின் இவ்வினப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் என்றார். விடுதலை பெற்ற தமிழ் நாட்டையும் ஈழநாட்டையும், தமிழினத்திற்கென்று ஒரு நாடன்று இரு நாடுகளை உருவாக்குவதே தமிழினப் பகைவர்களுக்கு நாம் வழங்கும் சரியான தண்டனை என்றார். இழந்து போன மொழி இன நாட்டுரிமைகளை மீட்டெடுப்பதே நெடுநடைப் பயணத்தின் நோக்கம் என விளக்கினார். இறுதியாகத் தமிழ் உரிமை தமிழர் இன உரிமை தமிழ் மக்கள் வாழ்வுரிமை மீட்பு நெடுநடைப் பயணத்திற்கு உலகத்தமிழரின் ஆதரவையும் பொருள் உதவியையும் வேண்டித் தம் உரையை நிறைவு செய்தார்.

முதல் நாள் பயணம், பொதுக்கூட்டம், உணவு ஆகிய அனைத்து ஏற்பாடுகளையும் வேதாரண்யம் வட்ட ம.தி.மு.க சிறப்பாகச் செய்திருந்தது. வழி நெடுக மக்கள் பயணத்தை வாழ்த்தியதோடு நிதியும் வழங்கி ஆதரித்தனர்.

தமிழ்மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் தன் குறிக்கோள்களை வென்றடைய பெருமளவு நிதி தேவைப் படுகிறது நெடுநடைப் பயணக் குழு பயணத்தின் நிதி இலக்கு ஒரு கோடி உருபா என அறிவித்திருக்கிறது. இதற்கெனத் தொடங்கப் பட்டிருபதே தமிழ் மீட்பு நிதியம் இந்நிதியத்திற்கு உலகத்தமிழர் அனைவரும் வாரி வழங்க பயணக் குழு வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழ் மீட்பு நிதியதிற்கு வழங்க:

கோ.நடராசன்(G.NADARAJAN)

வங்கி: INDIAN BANK

கணக்கு எண்: 434216484

வங்கி குறியீட்டு எண்:1325

தொடர்பு முகவரி:

தமிழ் மீட்பு நிதியம்,

மஞ்சுராஜ் அடுக்க்கம்,

89/31 காமராஜ் நகர், 3 ஆம் தெரு,

சூளைமேடு,

சென்னை-600094

பேசி: +91-9283110603

No comments:

Post a Comment