அந்தியூருக்கும் ஏழூருக்கும் இடையேயான தொலைவு ஏறத்தாழ 30 கி.மீ ஆகும். குறுநடைப்பயணத்தில் இது ஒரு நீண்ட பயணமே. மக்கள் தொண்டர்களுக்கு நெடுநடைப் பயணமும் குறுநடைப் பயணமும் ஒன்றே. மக்கள் தொண்டாற்றக் கிடைத்த வாய்ப்பே.
வழிநெடுகத் துண்டறிக்கை வழங்கியும் உண்டியல் ஏந்தியும் வந்தனர் தோழர்கள். அத்தானியிலும் தூக்கநாயக்கன் பாளையத்திலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தோழர் பாரதி ஏறிவரும் விலைவாசி, மின்வெட்டு, கல்வி வணிகமயமாக்கல், நளினி விடுதலை, ஈழ மக்கள் துயர் ஆகியன குறித்து விரிவாகப் பேசினார். இரவுணவும் தோழர் செழியனால் வழங்கப்பட்டது.
30.04.10 வெள்ளி காலையில் ஏழுரில் இருந்து கிளம்பிய தோழர்கள் நால்சாலை(ரோடு), பெரியகொடிவேரி கடந்து நண்பகலில் கொடிவேரி அணையை வந்தடைந்தனர். இப் பயணத்தில் காலை உணவு தோழர்களுக்குப் பழைய சோறாக இருந்தது. இரவு மிஞ்சிய சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் அதை அமுதாக உண்ட தோழர்களின் மனப் பக்குவத்தை எப்படிப் புகழ்வது?.
கொடிவேரி அணையில் ஆடைகளைத் துவைத்தும் நீந்திக் குளித்தும் களைப்பைப் போக்கினர் பயணக் குழுவினர். வெயிலில் களைத்து வந்த தோழர்களைக் கொடிவேரி அணை தாயாக அணைத்து மகிழ வைத்தது.
மாலையில் கொடிவேரி அணையில் இருந்து புறப்பட்ட பயணக் குழுவினர் ஒட்டர்பாளையம் வழியாக ம. குமாரபளையம் வந்தடைந்தனர் அங்கு மொழிப்போர் ஈகி முத்து நினைவுக் கல்வெட்டு முன் நின்று உறுதிமொழி ஏற்றனர். இந்நினைவுக் கல்வெட்டு புரட்சிகர இளைஞர் முன்னணியும், தமிழர் பண்பாட்டுக் கழகமும் இணைந்து உருவாக்கியதாகும்.
ஆனால் மழை மேலும் கனக்க கனக்க சாலையில் நடப்பதும் சிரமம் ஆனது. மழையில் நடக்கத் தடுமாறிய தோழர்களை ஊர்தியில் ஏற்றி அனுப்பி விட்டு கொட்டும் மழையிலும் கொள்கைப் பயணத்தைத் தொடர்ந்தனர் மற்ற தோழர்கள். இரவுத் தங்கலுக்காகச் சத்தியமங்கலத்தைக் கடந்து கெஞசனூர் சென்றது பணக்குழு. இப்பயணத் தொலைவும் ஏறத்தாழ 30 கி.மீட்டருக்கும் கூடுதலே. காந்தளகம் புத்தக நிலைய உரிமையாளர் திரு. ஆறுமுகம் தோழர்களை வரவேற்று இரவு உணவளித்தார்.
சத்தியமங்கலத்தில் இருந்து கோபி வரை மேற்கொண்ட மே நாள் குறுநடைப் பயணமும் 29 கி.மீட்டரைத் தொட்டது. அரியப்பம் பாளையம், மூலக்கிணறு, கொத்துக்காடு, இண்டியம் பாளையம், அரசூர், மா. கோம்பை, சிங்கிரிபாளையம், காசிபாளையம், கரட்டடிபாளையம் ஆகிய ஊர்களில் பரப்புரையும் நிதி தண்டலும் செய்தனர் தோழர்கள். கோபியில் மே நாள் விடுமுறை என்பதால் குறைவான கடைகளே திறந்திருந்தன. இப்பயணத்தில் பகல் உணவும் இரவுணவும் ம.தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ம.கந்தசாமி அவர்களால் வழங்கப்பட்டது.
மே நாளுக்கு அடுத்த நாளும் விடுமுறை நாளாக (ஞாயிறு) அமைந்ததால் பரப்புரையும் தண்டலும் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. இவ்வேமாற்றத்தைப் போக்குவதாக அமைந்தது இரவு நடைபெற்ற மே நாள் சிறப்பு – குறுநடைப் பயண விளக்கப் பொதுக்கூட்டம்.
பொதுக்கூட்டதிற்கு ம.தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ம.கந்தசாமி தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் இரவி வரவேற்புரை ஆற்றினார். நாம் தமிழர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன், பெரியார் திராவிடர் கழக் மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வழக்குரைஞர் ப.பா.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு நீண்டதொரு சிறப்புரை ஆற்றினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் குமரவேல் நன்றியுரை வழங்க பொதுக்கூட்டம் நிறைவுற்றது.
கோபியில் இரு நாள்களும் இரவு தங்குவதற்கு தி.மு.க இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் குமணன் தாய்த் தமிழ்ப் பள்ளியை ஏற்பாடு செய்திருந்தார். இரண்டாம் நாள் காலை உணவையும் பகல் உணவையும் செழியன் வழங்கினார்.

No comments:
Post a Comment