தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Monday, March 1, 2010

ஒன்றுபடுவோம் – மக்களுடன்

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்திற்கு நடுவில் இதை எழுதுகிறேன். இந்தப் பயணத்தில் நானும் தோழர்களும் தெரிந்து கொண்ட உண்மைகளில் ஒன்று: நமக்கும் வெகுமக்களுக்கும் பெரிய இடைவெளி உள்ளது!

பதவி அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பது உண்மைதான். திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அங்கங்கே சில பெரும்புள்ளிகளைச் சார்ந்து இயங்குகின்றன. இந்தப் புள்ளிகளைச் சுற்றி எடுபிடி வட்டங்கள் உள்ளன. கீழே இருப்பவர்களுக்கு ஆண்டைகளாகவும், மேலே இருப்பவர்களுக்கு அடிமைகளாகவும் செயல்படுகிறவர்கள்தாம் வட்டாரத் தலைவர்கள், உள்ளூர்த் தலைவர்கள். இந்தக் கட்சிகளில் தன்னலங் கருதாத் தலைவர்களையோ தொண்டர்களையோ காண்பது அரிதிலும் அரிது. அப்படி யாராவது இருந்தால் அவர்கள் செயல்முனைப்பற்று ஓய்ந்து போனவர்களாய் இருப்பார்கள். இந்தக் கட்சிகள் கொள்கை நிலையில் போண்டிகளாகி விட்டன.

காவிரி உரிமை பறிபோனதாலும், உழைக்கும் மக்களின் சமூகத் தகுநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாலும் எழுந்துள்ள புதிய நிலைமைகளுக்கு ஈடு கொடுப்பதில் இடது சாரிக் கட்சிகளுக்குக் கடும் இடர்ப்பாடுகள் உள்ளன.

ஆனால் பதவி அரசியல் கட்சிகள் விட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் போராட்ட அரசியல் இயக்கங்கள் வந்துவிட வில்லை. சில இடங்களில் சாதியமைப்புகள் தலைதூக்கியுள்ளன.

புரட்சிகர அரசியல் பேசுவோரும், தமிழ்த் தேசியர்களும் நகர எல்லைகளைத் தாண்டவே இல்லை என்ற எண்ணமே ஏற்படுகிறது. இவர்கள் தமக்குள் ஒன்றுபடுவதும் போராடுவதும் இவை குறித்துப் பேசுவதுமாகக் காலம் கழித்துக் கொண்டிருக்கும் போதே சிற்றூர்ப் பகுதிகள் எல்லா வகையிலும் பொட்டல் வெளியாய்க் கிடக்கின்றன. இவற்றைப் பூக்கள் நிரப்பத் தவறினால் புழுதிக் குப்பைகள் நிரப்பிவிடும் ஆபத்துண்டு.

ஆகவே அடிப்படை மாற்றத்தை விரும்புவோர் யாராயினும் மக்களை நாடிச் செல்வதும், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதும், அவர்களை அணித்திரட்டிப் போராடுவதும் அவசரத் தேவைகள். மக்களுக்குள்ள சிக்கல்களுக்கு மட்டுமல்ல, இயக்கங்களுக்குள்ள சிக்கல்களுக்கும் கூட இதுவே சரியான தீர்வு.

- தோழர் தியாகு

-சமூக நீதித் தமிழ்த் தேசம்

No comments:

Post a Comment