இன்று (28.02.2010) தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் 35ஆம் நாள். பட்டுக்கோட்டை வட்டம் அதம்பை எனும் சிற்றூரிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

பிப்ரவரி 20, 21இல் மன்னையும் வடுவூரும் தந்த ஊக்கத்துடனும் ஊட்டத்துடனும் 22ஆம் நாள் ஒரத்தநாட்டுக்குப் பயணமானோம். வடுவூரில் காலை உணவு சாப்பிடும் போதே, “மாலையில் ஒரத்தநாடு செல்லும் வரை எதுவும் கிடைக்காமற் போகலாம், நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று தோழர்களை எச்சரித்து வைத்தேன். உண்மையில் அப்படித்தான் ஆகிவிட்டது. ஒரத்த நாட்டில் எங்களை வரவேற்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் வைகறையும் மற்றத் தோழர்களும் உடனடியாக எங்களுக்கு உணவளித்த பிறகே பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

பொதுக்கூட்டத்தில் மதிமுக மாணவரணியைச் சேர்ந்த விடுதலைவேந்தன், ததேபொக தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ. இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றிய பிறகு நான் பேசினேன்.
23.02.2010 பயணத்தின் 30ஆம் நாளில் பப்பாநாடு வழியாகப் பட்டுக்கோட்டை சென்றடைய இரவு 8 மணியாகி விட்டது. ததேபொக தோழர் வெ. இராசேந்திரனும் தமிழ் உணர்வாளர்களும் ஒழுங்கு செய்திருந்த தெருமுனைக் கூட்டத்தில் மொழிச் சிக்கல் குறித்து விரிவாகப் பேசினேன். பட்டுக்கோட்டை அழகிரி 1938இல் முதல் மொழிப் போரின் போது நடத்திய நடைப்பயணத்தை நினைவுகூர்ந்து அவர் பெயர் தங்கிய மு.க.அழகிரி இந்திய அரசில் அமைச்சராக இருந்தும் தாய்மொழியில் பேசவும் கேட்கவும் (செவிமடுக்க) உரிமையின்றித் தவிக்கும் அவல நிலையை ஒப்பிட்டுக் காட்டிப் பேசினேன். மொழியுரிமைக்கும் இனவுரிமைக்கும் அரசுரிமைக்குமான இடைத்தொடர்பை விளக்கினேன். என் எதிரில் பெரிய கூட்டம் இல்லாத போதும் ஏராளமானவர்கள் என் உரையைக் கேட்டுக்கொண்டிருந்ததை அடுத்தடுத்த நாள்களில் பயணப் பாதை நெடுகிலும் தெரிந்து கொண்டோம்.

24.2.2010 நடுப்பகல் வரை பட்டுக்கோட்டையிலேயே கடைத்தெருவில் பரப்புரையும் உண்டியல் வசூலும் நூல் விற்பனையும் செய்தோம், பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்குத் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி,ராமசாமி எமது நெடுநடைப் பயணத்தின் தொடக்கத்திலேயே எங்களோடு நடந்தவர். இடையில் வேறு அவசரப் பணிகளுக்காகச் சென்றவர் மீண்டும் வந்து சேர்ந்து கொண்டார். அணைக்காட்டில் பகலுணவு உண்ட பின் முத்துப்பேட்டை நோக்கிப் பயணமானோம்.
தம்பிக்கோட்டையைத் தாண்டும் போதே காவல்துறையின் ’வரவேற்பு’ வலுவாக இருந்தது. அதிகாரிகளும் காவலர்களும் எங்களுக்கு முன்னும் பின்னும் செல்ல நாங்கள் முத்துப்பேட்டைக்குள் நுழைந்தோம். அங்கே அண்மைக் காலமாக இந்துத்துவ அமைப்புகளுக்கும் இசுலாமியர்களுக்குமிடையே பூசல் வளர்ந்து பதற்றம் நிலவியதை காவல்துறையினர் விளக்கினர். “உங்களால் ஏதும் புதுச்சிக்கல் வந்துவிடக்கூடாதே?” என்றனர். “எங்களால் சிக்கலுக்குத் தீர்வுதான் வரும்” என்று பதிலளித்தோம். முத்துப்பேட்டையின் பேட்டைப் பகுதியில் என்னை முதலில் வரவேற்று சால்வை அணிவித்தவர் ஓர் இசுலாமியர் – மனித உரிமை ஆர்வலரும் கவிஞருமான பேராசிரியர் பசீர் அகமது. அன்றையப் பயண முடிவில் அவரும் திரு மெய்யப்பத் தேவர் இல்லத்தில் எங்களோடு விருந்துண்டார்.
25.2.2010 நடுப்பகல் வரை முத்துப்பேட்டையிலேயே பரப்புரையும் உண்டியல் வசூலும் நூல் விற்பனையும் செய்தோம். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலகத்திற்குப் போய் கட்சித் தோழர்களையும் தமிழ் உணர்வாளர்கள் பலரையும் சந்தித்தோம். அன்றிரவு அதிராம்பட்டினத்தில் தெருமுனைக் கூட்டம் நடத்தி விட்டுத் தங்கினோம்.
26.2.2010 காலை புறப்பட்டு ராஜாமடம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் வழியாக பேராவூரணி சென்றடைய இரவு 8 மணி ஆகிவிட்டது. தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினேன்.

27.2.2010 காலை பேராவூரணியிலிருந்து புறப்பட்டு ஒட்டங்காட்டில் தோழர் அரங்க குணசேகரன் இல்லம் சென்றோம். அவர் சாலை விபத்தில் காயமுற்று வீட்டில் ஓய்வாக இருந்து வருகிறார். நாங்கள் உதயசூரியபுரத்தை அடைந்தபோது அ.இ.அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டத்துக்காக ஒலிபெருக்கியமைத்துப் பாடல்களை ஓட விட்டிருந்தனர். எங்கள் பரப்புரைக்காக வேண்டி அவர்கள் சிறிது நேரம் தங்கள் ஒலிபெருக்கியை நிறுத்தி வைத்து உதவினர். இரவு 8 மணிக்கு மேல் அம்பை சென்றடைந்தோம். அங்கே சுருக்கமாக நடைபெற்ற கூட்டத்தில் தோழர் இராமசாமி ஒரு தங்கக் கணையாழியை தமிழ் மீட்பு நிதியத்திற்காக வழங்கி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பயணம் தொடங்குவதற்கு முன்பே தோழர் பஞ்சநாதன் பொன் கொடுத்தார். தோழர் இராமசாமி கொடுத்ததே பயணம் தொடங்கிய பின் முதல் பொன்வரவு. பயணத்தின் 34ஆம் நாளைப் பொன்னாள் என்று சொல்லும் வாய்ப்பை வழங்கிய தோழர் இராமசாமிக்கு நன்றி!

மறு நாள் காலை அம்பையிலிருந்து ஊரணிபுரம் நோக்கிக் கல்லணைக் கால்வாய்க் கரையில் நாங்கள் நடந்த போது தோழர் இராமசாமியும் எங்கள் குழுவில் இருந்தார். இது அவருக்கு நெடுநடைப் பயணத்தில் 12ஆம் நாள்.
அடுத்த பொன்னாள் எப்போது வருமோ?
-- தியாகு
28.02.2010.