1. இடைக்கால அமைப்புக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தைப் பொதுப்பேரவை முழுமையாக விவாதித்தது. பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து தோழர் தியாகுவை நீக்கியதை பொதுப்பேரவை ஒரு மனதாக ஏற்றுக் கொள்கிறது. மேலும் அவரை அடிப்படைஉறுப்பினர் நிலையிலிருந்து தற்காலிகமாக நீக்குவது என்றும், அவருடைய எதிர்கால நடவடிக்கைகளைக் கணக்கில் கொண்டு மீண்டும் அமைப்பில் இணைத்துக் கொள்வதா இல்லையா என்பதை அடுத்துக் கூடும் பொதுப்பேரவை முடிவு செய்யும் என்றும் தீர்மானிக்கிறது.2. இப்பொதுப்பேரவையில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு மடல் அனுப்புவது என்றும், அவர்கள் அளிக்கும் விளக்கத்தை ஒட்டி அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இவ்விளக்க மடலை 15 நாள்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பேரவை தீர்மானிக்கிறது.3. தமிழ்த் தேசிய விடுதலை இயக்க உறுப்பினர் சுதா காந்தியை நாடு கடந்த தமிழ்ஈழ அரசாங்கத்தின் நியமன உறுப்பினர் பொறுப்பிற்கு இயக்கத்தின் இசைவு பெறாமல் தன்னிச்சையாக அறிவித்ததை பொதுப்பேரவை ஏற்க மறுக்கிறது.
4. தமிழ்த் தேசியப் பகை சக்தியான இந்தியத் தேசியக் கொடியைத் தியாகு தம் நெஞ்சில் அணிந்து கொண்டு தொலைக்காட்சியில் பங்கேற்றதை இப்பொதுப்பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
5. தமிழ்ஈழ விடுதலைக்கான ஆதரவையும் தமிழ்த்தேசிய விடுதலைக்கான போராட்டத்தையும் முழு வீச்சுடன் தொடர்ந்து முன்னெடுப்பதுஎன்றும் பேரவை உறுதி கொள்கிறது.
6. இப்பொதுப்பேரவை தோழர் மு.மோகன்ராசு அவர்களைப் பொதுச் செயலாளராகவும் தோழர்கள் சிவ.காளிதாசன் (சென்னை), கதிர்நிலவன் (மதுரை), நா.ஆறுமுகம் (நாமக்கல்), தேவேந்திரன் (கோவை) ஆகியோரைத் தலைமைக்குழு உறுப்பினர்களாகவும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கிறது. அடுத்த பொதுப்பேரவை கூடும் வரை இவர்கள் பொறுப்பில் இருப்பார்கள்.
7. தமிழ்த்தேசிய விடுதலை இயக்க மாத இதழான “சமூகநீதித் தமிழ்த் தேசம்” ஆசிரியர் குழுவிற்குத் தோழர்கள் கலைவேலு, கதிர்நிலவன் ஆகியோரைப் பொதுப்பேரவை தேர்ந்தெடுக்கிறது. இதழின் பதிப்பாசிரியராகத் தோழர் சிவ.காளிதாசன் அவர்களே தொடர்ந்து நீடிப்பார் என்றும் பொதுப்பேரவை தீர்மானிக்கிறது.
8. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் தோழர் மு.மோகன்ராசு, தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் சிவ.காளிதாசன், நா.ஆறுமுகம், கதிர்நிலவன், தேவேந்திரன் ஆகியோருக்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தை வழி நடத்திச் செல்லவும் உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் இயக்கத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முன்னெடுத்துச் செல்லவும் பொதுப்பேரவை முழு அதிகாரம் வழங்குகிறது.
![]()
தேதி : 27.05.2012
இடம் : ஈரோடு
பொதுச்செயலாளர்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்